என் அப்பாவைப் பற்றி என் நண்பர்கள் வட்டத்தில் மிகச் சிலருக்கே தெரியும். அப்பாவின் மறைவுக்குப் பின் அம்மா என்னுடன் அடிக்கடி வந்து தங்கியிருந்ததாலும், இறுதியில் எட்டு வருடங்களாக நாங்கள் இருவரும் ஒன்றாக இருந்ததாலும் என் அம்மாவைத் தான் பலருக்குத் தெரியும். நானும் அப்பாவைப் பற்றி எழுத வேண்டும் என்று பல காலம் நினைத்திருந்தாலும் இந்த வருடம் அப்பாவைப் பற்றி எழுதத் தூண்டிய பல தருணங்கள் அமைந்துவிட்டன.
என் அண்ணி மகள் திருமணத்துக்கு சென்றிருந்த போது, என் அத்தானின் மகன் என்னுடன் உரையாடிக் கொண்டிருந்தான். ஆலயத்துக்குள் இடம் இல்லாததால் வெளியே வேப்பமரத்தடியில் நின்று கொண்டிருந்தோம். எங்கிருந்தோ வந்த, எனக்குப் பழக்கமில்லாத என் தூரத்து சொந்தக்காரர் என்னிடம் வந்து, “உம் பையனாய்யா? உங்க அப்பாவ மாதிரியே இருக்கானே!” என்று கேட்க, நான் மறுத்தேன். ஆனால் என் அப்பாவின் சாயல் ஏறக்குறைய அப்படியே இருக்கும் என் அத்தை, அத்தான் போன்றோரை என்னால் மறுக்க முடியாது.
சென்னையில் ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று அத்தானின் ஆலயத்தில் நான் பங்கேற்ற போது. என்னை அறிமுகம் செய்த அத்தான் என் அப்பாவை நினைவுபடுத்திப் பேசினார். “மாமா நல்லா பாடுவாங்க. அவங்க திறமைகள் தான் எனக்கும் இருக்குது” என்றார். அசராமல் இரண்டு மணி நேரம் ஆராதனை, பாடல் என்று கர்ஜித்துக் கொண்டிருந்தார் அத்தான்.
கடந்த பத்து நாட்களில் எனக்குத் தெரிந்தவர்களில் ஐந்து பேரின் மரண செய்திகள் என்னை உலுக்கிவிட்டன. என் நண்பனின் அம்மா, என் அக்கா சாந்தி பாலையா அவர்களின் மரணச் செய்தி வந்த போது நான் அந்தமானுக்குச் சென்று கொண்டிருந்தேன். ஒரு வகையில் அவர்கள் என் மனதில் உயிருடனே இருக்கிறார்கள் என்றாலும், என் அம்மாவின் மரணத்திற்கு, கடைசி நேரம் கல்லறைக்கு வந்து பார்த்தவர்கள். அம்மாவின் நகையைக் கடைசியில் கழற்றிய போது தன் கைக்குட்டையால் அதைச் சுற்றிக் கொடுத்தார்கள். என் தங்கை அதை நினைவுபடுத்தினாள். அது அதே நகையுடன் வீட்டில் தான் இருக்கிறதாம். ஆங்கிலம், உலக இலக்கியம், வாழ்க்கைத் தத்துவம், புத்தகங்கள், உப்புமா என்று பலவற்றைப் பகிர்ந்திருக்கிறார்கள் அக்கா.
இன்று அப்பாவின் 23 ஆவது நினைவு நாள். தங்கைகளுடனும், மூத்த மைத்துனருடனும் வழக்கம் போல சொந்த ஊர் சென்று கல்லறைக்கு மாலை போட்டுவிட்டு, பிரார்த்தனை செய்துவிட்டுத் திரும்பும் போது, இன்று இரவு எப்படியும் அப்பாவைப் பற்றி எழுதிவிட வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன். சின்ன தங்கையின் வீட்டில் இருந்த அப்பாவின் புகைப்படங்களை பதிவு செய்து கொண்டு நேராக என் வீட்டுக்கு வந்து, இதோ தட்டச்சிக் கொண்டிருக்கிறேன்.
அப்பாக்களின் தியாகங்களும், அவர்களது முற்கால சரித்திரமும் தெரியாத, அவற்றைக் கொண்டாடத் தெரியாத பிள்ளைகள் தான் தகப்பனை மறக்க முடியும். என் தகப்பனிடன் நான் பல தடவைகள் அவரது சிறுவயதுக் கதைகளைக் கேட்டிருக்கிறேன். பல கதைகள் இப்போது தான் எனக்குத் தெளிவாகப் புரிகின்றன.
என் வீட்டில் நடந்த பல விஷயங்கள் சிறுவனாக இருந்த போது புரியாமல் இருந்தன. இப்போது புரியும் போது அப்பா இல்லை.
வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று எங்கள் குடும்பத்தைச் சொல்வார்கள். என் தாத்தா, ஒரே மகனாக இருந்தபடியால் தாம் தூம் என்று செலவழித்து விரைவிலேயே குடும்பத்தை வறுமை நிலைக்குக் கொண்டுவந்துவிட்டார். தாத்தாவைப் பற்றி ஒரு கதை தனியாக எழுதலாம். பெரியப்பாவின் திறமை, தலைமை தான் அப்பாவை ஆசிரியர் பயிற்சிக்கும், பின்னர் ஆசிரியர் வேலைக்கும் தள்ளி விட்டது. சாகும் வரை (இருவரும் தான்) என் அப்பா, பெரியப்பாவுக்குக் காட்டின மரியாதை இன்றும் எனக்கு ஆச்சரியமாக இருக்கின்றது.
கொட்டாங்குச்சியால் தாளம் போடுவதில் என் அப்பா பெயர் வாங்கியவர். ‘சிரட்டை’ செல்வராஜ் என்று தான் பலர் அவரை அழைத்திருக்கிறார்கள். ஆசிரியர் பயிற்சி நிலையத்தின் இசைக்குழுவில் அவர் பிரபலம். விக்டர் டேர் அவர்கள் தலைவராக இருந்த போது பிஷப் சார்ஜண்ட் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில் படித்திருக்கிறார் அப்பா. அவரது பள்ளிச் சான்றிதழில் இருந்த கையெழுத்து டேர் ஐயாவுடையது என்பதையும், டேர் ஐயாவின் மகள் தங்கம் அக்கா (எல்லா ஆலய கோபுரங்களிலும் மணிக்கொரு தடவை பைபிள் வசனங்கள் ஒலிக்க குரல் கொடுத்தவர்), அவர்கள் மகன் ஜூபல் என் நண்பர்கள் என்பதையும் அறிந்த போது சிறிது பெருமையாக இருக்கும். டேர் ஐயாவை சந்தித்திருக்கிறேன் ஆனால் அதிகம் உரையாடியதில்லை. என் அப்பாவின் இன்னொரு ஆசிரியரை சந்தித்தபோது என் அப்பாவின் இன்னொரு சாதனை தெரியவந்தது, “ஏய் அவன் பரிட்சை எழுதறப்போ தூங்குனவம்லா” என்றார் அந்த ஆசிரியர். எத்தனை நினைவாற்றல் அந்த ஆசிரியருக்கு!
அப்பாவின் புல்புல் தாரா, ஆர்மோனியம், சைலஃபோன், வயலின் எல்லாவற்றையும் விட அவரது பாடல் தான் எனக்கு அதிக விருப்பமானது. பஜனை பிரசங்கங்கள் பல செய்திருக்கிறார். பல பழைய திரைப்படப்பாடல்களின் மெட்டுக்களில் வேதாகமக் கதைகளைச் சொல்லி பஜனை செய்த போது சில ஊர்களில் எதிர்ப்பு கிளம்பியதால், கிறிஸ்தவ பாடல்களின் மெட்டிலேயே புதிய பாடல்களைக் கதைகளுக்கு ஏற்ப எழுத வேண்டியதிருந்தது. அப்போது சில பாடல்களை எழுதிக் கொடுத்தது தான் எனது பாடல் எழுதும் பயணத்தின் இரண்டாம் படியாக இருந்தது. (முதல் படியைப் பற்றி இப்போது வேண்டாம் என்று நினைக்கிறேன்).
நான் கித்தார் படிக்க ஆசைப்பட்ட போது தன் ஆர்மோனியத்தை விற்று எனக்கு கித்தார் வாங்கிக் கொடுத்தார். எப்போதெல்லாம் பள்ளியில் சுற்றுலா திட்டமிடப்படுகிறதோ, தன் தகுதிக்கும் அதிகமாக செலவு செய்து என்னை அனுப்பி வைப்பார். அன்பை வெளியே காட்டிக் கொள்ளமல் இருந்தாலும் அது எங்களுக்குள் அனுபவிக்கப்பட்டுக் கொண்டு தான் இருந்தது. அப்பா ஒரு போதும் என்னை அடித்ததாக எனக்கு நினைவு இல்லை. முதல் முதலாக சைக்கிள் ஓட்டி முட்டியை சிராய்த்துக் கொண்டு வந்த போது, சைக்கிள் ஓட்டுனா அடிபடத்தான் செய்யும் என்று வாழ்க்கை என்பது எப்படிப்பட்டது என்று கற்றுக் கொடுத்தவர். என் சிறிய தங்கைக்கு வாய்க்காலில் நீச்சல் கற்றுக் கொடுத்து, என்னை வெட்கப்பட வைத்து, நீச்சல் கற்றுக் கொள்ள வைத்தவர். ஊர் சுற்ற, இரவில் இரண்டாம் ஆட்டம் சினிமா பார்த்து வர, எந்த இடத்திலும் படுக்க, எதைக் கொடுத்தாலும் சாப்பிட, வயது முதிர்ந்தவர்களுக்கு மரியாதை கொடுக்க கற்றுக் கொடுத்தவர் அப்பா.
ப்ளஸ் டூ படிக்கும் போது தலைமை ஆசிரியர் அப்பாவை அழைத்து வரச் சொல்லி, “உங்க பையனுக்காக நீங்க ப்ரே பண்ணணும்” என்று சொன்ன போது, “நீங்க ப்ரே பண்ணுங்க ஃபாதர்” என்று சொன்னபோது எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. கல்லூரியிலும் முதல்வர், “நம்ம பசங்கள எனக்கு உதவியா இருக்கத் தான் சேர்த்துருக்கேன். எந்த பையன் என்ன செய்றான்னு இவன் எனக்கு சொல்றது இல்ல“ என்ற போது, “சின்ன பசங்க அவங்க ஃப்ரண்டச விட்டுக்குடுக்க மாட்டாங்க இல்லியா?” என்று சொன்னார் அப்பா.
ஜாதி என்றால் என்ன என்று தெரியாத மாஞ்சோலை எஸ்டேட்டில் நான்காம் வகுப்பு வரை நான் படித்தேன். பின்னர் பிள்ளைகள் படிப்புக்காக நாங்கள் சமவெளிக்கு வந்த போது ஜாதி என்னும் ஏற்றத் தாழ்வுகள் எங்களுக்குள் எட்டிப் பார்த்ததே இல்லை. பள்ளிக்கூடத்துக்கு பனங்கிழங்குடன் வரும் பிள்ளைகளிடம் பிடுங்கி சாப்பிடும் ஒரு வாத்தியார் அவர். வீட்டில் பனங்கிழங்கு முளைக்க வைத்து மாதக்கணக்கில் சாப்பிட்டுக் கொண்டிருப்பார். அம்மா உலகத்திலேயே சிறந்த முறுக்கு செய்வார்கள் என்றால், அப்பா குடும்பத்திலேயே சிறந்த பக்கோடா செய்வதில் வல்லவர்.
நகைச்சுவையில் அப்பா தான் எனக்கு ஜீன் தந்தவர். அம்மா ஜோக்குக்கு கூட அழுகின்ற ஆள். யாராவது சிறு பிள்ளைகள் கீழே விழுந்துவிட்டால், “இங்க வா தூக்கி விடுறேன்” என்பார். “சாப்பாடு எப்படி இருக்கு சார்” என்று கேட்கும் உபசரிப்பாளரிடம், “கல்லு மட்டும் தான் வேகல” என்று கலங்கடிப்பார். வெள்ளரிக்காய் கதை, மருமகன் எலும்பு சாப்பிட்ட கதை, சிக்கனமான தம்பதிகள் விருந்தாளிக்கு தோசை கொடுத்த கதை என்று கதைகளாக எடுத்து விடுவார். வாசிப்பதில் ஆர்வம் அதிகம் உள்ளவர். தினசரி பேப்பர் வாசிக்காமல் நாள் துவங்காது. ‘கல்கண்டு’ பத்திரிக்கை வாரம் தோறும் வீட்டுக்கு வந்துவிடும். ரேடியோ (அதை வைத்திருப்பதற்கு போஸ்ட் ஆஃபீசில் அவ்வப்போது பணம் கட்ட வேண்டும்), மோனோ, ஸ்டிரியோ டேப் ரெக்கார்டர்கள் என்று இசைக்கும் வீட்டில் பஞ்சம் இருக்காது.
அப்பாவின் வளைந்து கொடுக்கும் தன்மை தான் என்னை பல விதங்களில் உயர்த்தியிருக்கிறது என்று இப்போது புரிகிறது. அம்மாவின் பிடிவாதமும், உறுதித் தன்மையும் கொள்கைகள் அளவில் எனக்குள்ளே இருந்தாலும், உறவுகள் என்று வரும் போது அப்பாவின் ரப்பர் தன்மை தான் எனக்குள் இன்று வரை வளர்ந்து கொண்டே இருக்கிறது. கடன் வாங்கியவர்களை அப்படியே விட்டுவிடுவார், “சரி அந்தப் பணத்தோட போகட்டும், இனிமே கடன் கேட்டு வரமாட்டார் இல்லியா?” என்பார். பிறருக்கு உதவி செய்ய அளவுக்கு அதிகமாக முயற்சி செய்து பெரிய கடனில் விழுந்தார். “யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்” என்று சொன்னபடியே, அவர் மரணத்துக்குப் பின் வந்த பணத்தை கடன்களை அடைக்க எண்ணிக் கொடுத்த போது அடக்க முடியாமல் அழுதது இன்று தான் நடந்தது போல் நினைவில் இருக்கிறது.
எஸ்டேட்டில் நட்பு முறையில் துவங்கிய குடி இறுதியில் அவரை அடிமைப்படுத்தி விட்டது. அப்பா குடிப்பது எனக்கு அவமானம் என்று தான் நான் நினைத்தேன். “நிறுத்தணும்னு நினைக்கிறேன். முடியலடா” என்று கண்ணீரோடு அவர் முணுமுணுத்த போதெல்லாம் கடினமாகத் திட்டியதை இன்று நினைத்தாலும் வேதனையாகத் தான் இருக்கின்றது. இன்று இருக்கும் முதிர்ச்சி அப்போது இருந்திருந்தால், அவரை ஆதரவுடன் நடத்தியிருந்தால் கூடக் கொஞ்ச வருடம் இருந்திருப்பாரோ என்னவோ. என் அப்பா இறந்தது ஐம்பத்து நான்காவது வயதில் என்று என் மூத்த தங்கை சொன்ன போது, “அம்மாட்ட தான் கேக்கணும்” என்று சட்டென்று சொல்லிவிட்டு, அப்பாவின் அருகிலேயே அம்மாவும் அடக்கம் பண்ணப்பட்டிருப்பதை நினைத்து அந்த நேரத்தில் சிரிப்பது நன்றாக இருக்குமா என்று நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டோம். “அடுத்த வருஷம் எனக்கு அப்பா வயசு ஆயிரும், அதுக்கு அடுத்த வருஷம் அப்பாவ விட எனக்கு வயசு கூடிரும்” என்றேன். கிராம ஆலயம் ஒன்றில் வழிபாடுகளை நடத்தும் உபதேசியார் என்ற பதவியை ஏற்றால் தான் ஆசிரியர் வேலை கிடைக்கும் என்றதால் அப்பா அந்த வேலையையும் செய்தார். குடிக்கிற ஒருவர் ஆலயத்தில் வேலை செய்வது தவறு என்பது தான் எங்கள் வாதமாக இருந்தது. இப்போது இருக்கும் பல ஆன்மீகத் தலைவர்களுடன் அப்பாவை ஒப்பிட்டால் அவர் அப்படி ஒன்று மோசமானவர் அல்ல என்று தான் சொல்ல வேண்டும்.
அப்பாவைக் கல்லறையில் வைத்துவிட்டு திரும்பி வந்த போது மனதில் பாரமாக இருந்தது. எத்தனையோ பேருக்கு நற்செய்தியைச் சொல்கிறோமே! மோட்சத்துக்கு வழி இது தான் என்று சொல்கிறோமே, அப்பா எங்கே போயிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அன்று நான் வாசிக்க வேண்டிய வேதப் பகுதியில் இந்த வசனம் இருந்தது. அப்பாவின் ஆன்மீகம் பற்றி எனக்குத் தெரிந்ததையும், அவரது கடைசி நாட்களில் அவர் மனம் வருந்தியதைப் பற்றி அம்மா சொன்னதையும் நான் எனக்கும், அப்பாவுக்கும் சாதகமாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை. யாரிடமும் நான் நியாயப்படுத்தப் போவதும் இல்லை. நான் அன்று பார்த்த அந்த வேத வசனம் எனக்கு இன்றும் அப்பாவைப் பற்றிய நினைவு வரும் போதெல்லாம் மனதில் நிம்மதியைக் கொடுக்கிறது. “இந்தச் சிறியரில் ஒருவனாகிலும் கெட்டுப்போவது பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவின் சித்தமல்ல.”