#ஷாக்குத்தத்தம்
“இந்த ஆலயத்தை இடித்துப் போடுங்கள்; மூன்று நாளைக்குள்ளே இதை எழுப்புவேன்” என்றார். (யோவான் 2:19)
இயேசு தனது உடலைக்குறித்து தான் இப்படி சொன்னார் என்றாலும், எருசலேம் தேவாலயத்தின் வியாபாரத்தைத் தாக்கிய பின்னர் யூதர்கள் ஒரு அடையாளத்தைக் கேட்டபோது இவ்வாறு சொன்னார். )
“என்னுடைய வீடு ஜெபவீடாயிருக்கிறதென்று எழுதியிருக்கிறது, நீங்களோ அதைக் கள்ளர்குகையாக்கினீர்கள்” என்றார். (லூக்கா 19:46)
இன்னொரு சூழலில் பிரம்மாண்டத்தையும் அழகையும் பற்றி மக்கள் வியந்து பாராட்டியபோது இயேசு, “நீங்கள் பார்க்கிற இவைகளில் ஒரு கல் மற்றொரு கல்லின்மேலிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்படும் நாட்கள் வரும்”என்றார். லூக்கா 21:6
கர்த்தரை விட, பிறரைவிட ஆலயத்தை அதிகம் நேசிக்கும் போது அந்த ஆலயம் ஊழலுக்குக் காரணமாகும், ஜெபம் குறைந்து வியாபாரம் கூடும். தேவ பயத்தைவிட அரசியல் மேலானதாக ஆட்சி செய்யும்.
இப்போது உங்களுக்கு ஆலயத்தின் மேல் இருப்பது என்ன?: பற்று, பக்தி, வெறி, மதிப்பு, முதல் உரிமை.
கர்த்தர் எரிச்சலுள்ளவர். அவர் இடத்தில் வேறு எது இருந்தாலும் அவர் அதைப் பொறுத்துக் கொள்ள மாட்டார். தன் மக்கள் வந்து கூடும் ஒரு இடத்தில் தான் வருவேன் என்று சொன்னவர், இப்போது ஆலயங்கள் பூட்டப்பட அனுமத்தித்தது ஏன் என்று சிந்தித்திருக்கிறீர்களா? அல்லது வாங்கும் அல்லது வாங்கப் போகும் காணிக்கைக்கு உண்மையாக உடனே இணையத்தில் அதே ஆலயத்தைக் கட்டி எழுப்பி, இன்னும் பரபரப்பாக ஊழியம் செய்யத் துவங்கிவிட்டீர்களா?
ஆலயம் போவதைவிட வீட்டிலே வசதியாக திரையைப் பார்த்து ஆராதிப்பது வசதியாகிப் போய்விட்டதா?
இது நம்மை நாமே சோதித்துப் பார்க்க, அமர்ந்திருந்து அவரே தேவனென்று அறிந்து கொள்ள அவர் நம் அனைவருக்கும் கொடுத்த காலம் என்று நாம் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது?
நம் ஆலயங்களில் அவருக்கு விருப்பமில்லாதவைகள் இருந்தால் அவற்றை எல்லாம் இடித்துப் போட்டால், அவர் மீண்டும் எழுப்புவார். அது நிச்சயமாக அவரது மணவாட்டிக்கான குணங்கள் அதிகமுள்ள ஆலயமாக இருக்கும். இல்லையென்றால் பூட்டப்பட்டதால் வீணாகி இடிந்து போகும் நிலையும் வரலாமே! இரண்டு வருடங்களுக்கு முன்பு வரை யாருமே இப்படிப்பட்ட ஒரு நிலை வரும் என்று கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்கவில்லை அல்லவா?
இறுதியாக இது திருச்சபையின் ஆலயங்களுக்கு மட்டுமல்ல. நமது உடல்களுக்கும் பொருந்தக்கூடியது. நம் சொந்த உடலை நாம் எந்த அளவுக்குக் கர்த்தரின் ஆலயமாக வைத்திருக்கிறோம் என்பதையும் சிந்தித்துப் பார்க்க இந்தக் காலம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எடுத்துக் கொண்டால், நம் பழைய சரீரம் கொல்லப்பட்டு புதிய பிறப்பு நமக்குள் நடைபெறும்.