Home » Home » அம்மை.

அம்மை.

#biographyInTamil #amycarmichael

“அம்மை”

அந்த ஏழு வயதுக் குழந்தை ப்ரீனா, மூச்சு இரைக்க ஓடி வந்தாள். தன்னைத் துரத்தி வருபவர்கள் பிடித்துவிட்டால், கண்டிப்பாக இந்த முறை என்ன செய்வார்கள் என்பதே தெரியாது. ஏற்கனவே தப்பிக்க முயற்சி செய்ததால், சிறு பிள்ளை என்றும் பார்க்காமல், கையில் சூடு போட்டுவிட்டார்கள்.

அவள் செய்த தப்புதான்  என்ன?

தப்பு செய்ய மாட்டேன், தப்பான இடத்தில் இருக்க மாட்டேன் என்று சொன்னதுதான் அவள் செய்த தப்பு! ‘வெள்ளைக்கார அம்மா ஒருவர் பங்களாவில் இருக்கிறார். அவரிடம் போனால் தனக்கு பாதுகாப்பு கிடைக்கும்’ என்று கேள்விப்பட்டிருந்தாள் அவள்.

தன் தாயே தன்னை இப்படிப்பட்ட ஒரு இடத்துக்கு அனுப்பி வைத்துவிட்டாளே என்ற வருத்தம், தான் கோவிலுக்குள் அனுப்பப்பட்டதும் அங்கிருந்த மற்ற பெரிய பெண்கள் தன்னிடம் விளக்கிச் சொன்ன விஷயங்கள் அனைத்துமே குருவியின் தலையில் வைத்த பனம்பழத்தைப்போல புரிந்தும் புரியாமலும் இருந்தது. ஆனால் அது சரி அல்ல, அது தனக்கு நல்லது அல்ல என்பது மட்டும் அந்தச் சிறுமலரின் இதயத்தில் ஆழமாகப் பதிந்து கொண்டிருந்தது.

அதுவரை ஊர் ஊராகச் சென்று பெண்களை வீடுகளில் சந்தித்து வேதாகமத்தையும் கிறிஸ்துவின் அன்பைப் பற்றிய நற்செய்தியையும் சொல்வதைத் தீவிரமாகச் செய்து வந்த ஏமி கார்மைக்கேல் அம்மாவின் ஊழியத்தின் திசை இங்கேதான் மாறியது. ப்ரீனா போன்ற ஆயிரக்கணக்கான சிறுமிகள் இந்தியாவின் பல பாகங்களிலும் இருந்து காப்பாற்றப்பட்டு ஏமி கார்மைக்கேல் அம்மா துவங்கிய டோனாவூர் ஐக்கியம் என்ற அமைப்புக்குள் பாதுகாப்பாக வளர்க்கப்பட்டனர். கடவுளுக்கு என்று அர்ப்பணிக்கப்பட்டதாக சொல்லப்பட்டு சாத்தானின் அத்தனை தீமைகளுக்கும் ஆளான பெண்கள், உண்மையாகவே கர்த்தரைப் பற்றி அறிந்து கொள்ளவும், கர்த்தரின் வழிகளில் பரிசுத்தமாக நடக்கவும் ஒரு புதிய பாதை கிடைத்தது.

தன் வெள்ளை நிறத்தை மறைக்க காப்பித் தூளைத் தன் மீது பூசிக்கொண்டு, எந்த இடத்துக்குள்ளும் நுழைந்து பிள்ளைகளைக் காப்பாற்றும் துணிச்சல், எத்தனை எதிர்ப்பு வந்தாலும் பிள்ளைகளைப் பாதுகாக்கும் அர்ப்பணிப்பு, நியாயத்துக்காக அனைத்து அதிகாரிகளையும் தொடர்பு கொள்ளும் அயராத உழைப்பு இவற்றால் ஏமி கார்மைக்கேல் அம்மாவினால் பாதுகாக்கப்பட்ட பெண்கள் ஆயிரக்கணக்கானோர். பெற்ற தாய்களே வெறுக்கும் வகையில், பிறந்த ஆண்பிள்ளைகளும்கூட இவரது ஐக்கியத்தில் பின்பு துவக்கப்பட்ட இல்லங்களில் திரளாக வளர்க்கப்பட்டனர்.

பெற்ற தாயை அழைக்கும் குழந்தையின் முதல் வார்த்தை அம்மா. தென் தமிழகத்தில் அதே வார்த்தை ‘அம்மை’ என்று பாசத்துடன் சொல்லப்படுகின்றது. இங்கிலாந்தில் இருந்து தென் தமிழகத்துக்கு வந்து, தன் தாயைக் காணாமலேயே உலகத்தில் வந்துவிட்ட குழந்தைகளுக்கும், அன்னைகளால் தெரிந்தே தொலைத்துப் போடப்பட்ட பிள்ளைகளுக்கும் அன்னை ஏமி கார்மைக்கேல் தாயாகத் தன் மடியைக் கொடுத்திருக்கிறார்.

வட அயர்லாந்தில் மில்லைல் என்னும் சிற்றூரில் பெரும் பணக்கார வீட்டில் பிறந்து வளர்ந்தவர் ஏமி கார்மைக்கேல். பின்னர் பணப் பிரச்சனையால் படிப்பைத் தொடர முடியாமல் தன் தாய்க்குத் துணையாக மூத்த மகளாகத் தன் உடன் பிறந்த ஆறு பிள்ளைகளையும் வளர்க்கும் பொறுப்பில் இருந்து, முதிர்ச்சியைப் பெற்றவர். பள்ளியில் படிக்கும்போது ‘இயேசு எந்தன் நேசரே’ (Jesus Loves me this I know) என்ற பாடலைத் தன் வாழ்வில் அப்படியே பொருத்திப் பார்த்து, தன் வாழ்வில் இயேசு ஒருவர்தான் நேசர் என்ற முடிவுக்கு வந்தார். வேத புத்தகத்தின்படி நடப்பதே வாழ்வின் நோக்கம் என்ற நிலைக்கு வந்த ஏமி, தன் வாழ்வின் இறுதி மூச்சுவரை வேத புத்தகத்தின்படி நடப்பதில் கொஞ்சம் கூட தவறவே இல்லை. எடுக்கவேண்டிய முடிவுகள் சிறிதோ பெரிதோ, தனக்கு வழி காட்ட வேதாகமத்தை மட்டுமே சார்ந்திருந்தார்.

அக்குளிர்நாட்டில் தலையில் தொப்பிகூட போட முடியாத அளவுக்கு வசதியும் அந்தஸ்தும் இல்லாத ஷாலிஸ், அதாவது ‘துண்டுக்காரிகள்’ என்று அழைக்கப்பட்ட தலையில் ஷால் எனப்படும் துண்டு கட்டிக் கொண்டு வேலைக்குச் சென்று வரும் சிறுமிகளுக்காகத் தன் இளம் வயதில் பெரும் சமூகப் பணியுடன்  ஆன்மீகப் பணியையும் செய்தவர் ஏமி. அந்தச் சிறுமிகளை ஒரு ஐக்கியமாகக் கூட்டுவதற்கு ஒரு இடம் தேடியபோது, இடத்துடன் அதில் கட்டிடம் கட்டவும் பண உதவி அற்புதமாகக் கிடைத்தது. ஆலயத்தின் அறை            ஒன்றில் நடந்த அந்த வகுப்புகள், இடம்போதாமல் 500 பேர் அமரக்கூடிய வரவேற்பு அரங்கம் என்ற பெயரில் கட்டப்பட்டது. அதற்கான இடம், கட்டுமானப்பொருட்கள் யாவும் இரண்டே பேரின் நன்கொடைகளில் கிடைத்தன. அந்தப் பணியின் துவக்க விழாவில் எல்லா வேலைகளையும் செய்துவிட்டு, கூட்டத்தோடு கூட்டமாக உட்கார்ந்திருந்த அந்த எளிமையும், அடக்கமும்தான் அவர் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் கூட தெரிகின்றது.  ஆம்,        கட்டிடம் வேண்டாம், வெறும் மண் குவியலுக்கு மேல் ஒன்றும் தேவையில்லை என்று சொன்னவருக்கு, பறவைகள் நீர் அருந்தி, குளித்துச் செல்ல ஒரு சிறு தொட்டி மட்டுமே, அம்மை என்ற பெயர் பொறிக்கப்பட்டு அவர் விதைக்கப்பட்ட இடத்தின் மீது இருக்கின்றது.

தான் புகைப்படம் எடுப்பதை அறவே விரும்பாத இந்த ஏமி கார்மைக்கேல் அம்மா இந்தக் காலத்தில் இருந்திருந்தால் நிச்சயமாக செல்ஃபி எடுத்திருக்கவே மாட்டார்கள்!

வாழ்க்கை புதிர்களும் திருப்பங்களும் நிறைந்தது. அம்மாவின் இளம்பருவமும் சீராகச் செல்லவில்லை. மிகவும் சீக்கிரத்திலேயே இறந்து போனார் ஏமிகார்மைக்கேல் அவர்களின் தகப்பனார்.  ஆனாலும் ஒரு தந்தையின் ஸ்தானத்தில் இருந்து ஏமியை வழிநடத்த கர்த்தர் ஒரு மனிதரை ஆயத்தப்படுத்தி வைத்திருந்தார். ஏமியை ஆன்மீகத்தில் வழிநடத்தியவர் பெரியவர் வில்சன் அவர்கள். அவர் பெயரைத் தன் பெயருடன் இணைத்துக்கொள்ளும் அளவுக்கு நன்றியுடையவராக பின் நாட்களில் இருந்தார் ஏமி. குடும்ப சூழ்நிலை காரணமாக மான்செஸ்ட்டர் பட்டணத்துக்குப் போக நேர்ந்த போது அங்கும் இதே ஊழியத்தைத் தொடங்கித் தொடர்ந்தார் ஏமி.  அந்த ஊழியம் இன்று வரை நடைபெற்று வருவது ஆச்சரியம். அது ஏமி கார்மைக்கேல் அம்மாவின் அர்ப்பணிப்பையும் அதற்கு அஸ்திபாரமான அவரது ஊழியத்தையும் நமக்கு காட்டுகின்றன.

கெஸ்விக் என்னும் இடத்தில் அடிக்கடி நடக்கும் ஆன்மீகக் கூட்டங்களில் பங்கேற்ற ஏமிக்கு, இயேசுவைப் பற்றி அறியாத மக்கள் இருக்கும் நாடுகளுக்கு ஒரு ஊழியக்காரியாகப் போகவேண்டும் என்ற ஆவல் அதிகம்  பிறக்க ஆரம்பித்த காலம் அது. கலாச்சாரம் கடந்த ஒரு மிஷனரியாக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட அவர் நாட்டைவிட்டு வெளியேறி, ஒருமுறை  சீனா, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று இலங்கை வழியாக இங்கிலாந்துக்குத் திரும்பி வந்தார். காரணம் உடல்நிலை ஒத்துவரவில்லை. மீண்டும் இந்தியாவுக்கு செல்ல நண்பர்களிடமிருந்து ஆலோசனை கிடைத்தது. பெங்களூருக்கு வந்தார். தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு பின்னர் திருநெல்வேலியிலுள்ள பண்ணைவிளை என்ற பகுதியில் தன் பணியைத் துவங்கினார். தன்னுடன் இணைந்து கொண்ட சில பெண்மணிகளுடன் கிராமம் கிராமமாகச் சென்று பெண்களைச் சந்தித்து இயேசுவின் அன்பைக் குறித்து அறிவித்து வந்தார்.

ஜப்பானில் அந்த நாட்டு மொழியை அறிந்து கொள்வதற்கு முன்பதாகவே அவர் தனது சாட்சியை சொல்வதற்காக சென்றுவிட்டார். அவரது மொழிபெயர்ப்பாளர் ஏமியை ஜப்பானிய உடையாகிய கிமானோவை அணிந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். ஆனால் ஏமி தனது உடல் பலகீனத்தின் காரணமாகவும், குளிராக இருந்தபடியாலும் தனது மேல்நாட்டு உடையையே               அணிந்திருந்தார். அவர்கள் இருவரும் சுகவீனமாக இருந்த ஒரு வயதான பெண்மணியை சந்திக்கச் சென்றிருந்தனர். அவர் நற்செய்தியில் ஆர்வம் உள்ளவராக இருந்தார். ஏமி அந்தப் பெண்ணிடம் தன் பாவங்களுக்காக மனம் வருந்தி ஜெபிக்க வேண்டும் என்று சொல்லும் அந்த நேரத்தில், ஏமி தன் கைகளில் அணிந்திருந்த மிருக முடி விளிம்புள்ள கையுறையின் மீது அந்தப் பெண்ணின் கவனம் சென்றது. அந்த வயதான அம்மா அதைப்பற்றி கேள்விகள் கேட்கத் துவங்கிவிட்டார். வீடு திரும்பும்போது ஏமி மனம் கசந்து அழுதார். இனிமேல் மனமாற்றம் என்ற இத்தனை பெரும் பாக்கியத்தை இத்தனை சிறு பொருளால் இழந்து போகவே மாட்டேன் என்று தீர்மானம் செய்தார். பின்னர் ஜப்பானிய உடைகளையே தனது ஊழிய நேரங்களில் அணிந்தார். இந்தியா வந்த பின்னர் தனது நிரந்தர உடையாக சேலையையே தேர்ந்தெடுத்தார்.

இந்திய கலாச்சாரத்தை மதிக்கும் விதத்தில் தானும் சேலையை உடுத்திக் கொண்டார் ஏமி. தமிழ் மொழியை நன்றாகக் கற்றுக் கொண்டதுடன், பிற்காலத்தில் தன்னுடன் ஐக்கியத்தில் ஊழியத்துக்கு என்று வந்து இணைந்துகொள்ள விரும்பிய அனைத்து மேல்நாட்டு மிஷனரிகளையும் தமிழ் கற்காமல், இந்திய உடை உடுக்காமல் ஊழியம் செய்ய அவர் அனுமதித்ததே இல்லை.  தன்னை மிஷனரி வாழ்வுக்கு அர்ப்பணிக்க விரும்பிய ஒரு பெண் ஏமி கார்மைக்கேல் அம்மையாருக்கு ஒரு கடிதம் எழுதி, “மிஷனரி வாழ்க்கை எப்படி இருக்கும்?” என்று கேட்டிருந்தார். பதில் எழுதிய ஏமி, “மிஷனரி வாழ்க்கை என்பது சாவதற்கான ஒரு வாய்ப்பு” என்றார்.

வாழ்வின் பிரகாசமான பகுதிகள் மட்டுமல்லாமல், இருளான பகுதிகளையும் நாம் சந்திக்க வேண்டியிருக்கும், அவற்றை ஏற்றுக் கொண்டு முன்னேறிச் செல்ல வேண்டும் என்பதுதான் ஏமி சிறுவயதிலிருந்தே கற்றுக் கொண்ட மிக  முக்கிய பாடம். தன் தாயைப் போன்ற நீல நிறக் கண்கள் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்ட ஏமி, மூன்று வயதாக இருக்கும்போது, இயேசு உன் ஜெபத்தைக் கேட்பார் என்று சொல்லிக்கொடுத்திருந்த தாயின் வார்த்தைகளை அப்படியே நம்பி, தினமும் இரவு ஜெபத்தில் நீல நிறக் கண்கள் வேண்டும் என்ற உறுதியாக ஜெபிப்பதும், காலை எழுந்ததும் விசுவாசத்துடன் கண்ணாடியில் சென்று பார்ப்பதுமாக இருந்தார். ஆனால் அவர் கண்கள் இருக்கிறபடியேதான் இருந்தது. சோர்ந்து போனார்.

விரைவில், இல்லை என்பதும் ஒரு பதில்தான் என்பதை ஏற்றுக் கொண்டார். ஆனால், அந்தப் பழுப்பு நிறக் கண்கள்தான்  முப்பது வருடங்களுக்கும் மேலான இந்திய ஊழியத்தில் தன்னை இந்தியர்கள் ஏற்றுக்கொள்ள ஒரு காரணமாக இருந்தது என்பதைப் புரிந்து கொண்டார். சேலையும், காப்பித் தூளும், பழுப்பு நிறக் கண்களும்தான்   பல சிறுமிகளை மீட்ட சாகசம் நிறைந்த அனுபவங்களில் அவருக்கு உதவியாக இருந்திருக்கின்றன.

ஏமியின் தாயார் சிறிது காலம் டோனாவூருக்கு வந்து, தன் மகளின் ஊழியங்களில் பங்குபெற்றார். நாடு  திரும்பியதும் தன் மகளின் ஊழியத்துக்கான ஜெப உதவிகளையும், பண உதவிகளையும் ஒருங்கிணைப்பதற்காகத் தன் மரணம்வரை உழைத்தார். பலர் ஊழியர்களாக டோனாவூருக்கு வந்தனர். பலர் தங்கள் பொருளாலும் ஜெபத்தாலும் அங்கிருந்தே தாங்கிவந்தனர். ஊழியம் விரிவடைந்ததுபோலவே அதற்கான உதவிகளும் பெருகின.

ஒவ்வொரு நாளும் தன் அருகே இயேசுவும் இருக்க வேண்டும் என்று ஜெபித்துப் பழகிய ஏமி, இறுதிவரைத் தனக்குத் திருமணம் தேவையில்லை என்று முடிவு செய்து விட்டார். தன்னுடன் இருக்கும் சகோதரிகளிலும் இப்படிப்பட்ட வாழ்வைத் தேர்ந்தெடுப்பவர்களை உற்சாகப்படுத்தி உடன் ஊழியர்களாக ஏற்படுத்திக் கொண்டார். அக்கா, சித்தி, அண்ணாச்சி என்று பலர் இவ்வாறாக டோனாவூர் ஐக்கியத்தில் இணைந்து சிறுவர் சிறுமிகளை குடும்பத்தின் அரவணைப்புடன் பார்த்துக்கொண்டனர். தனக்கென்று தன் உடலிலிருந்து பிள்ளைகள் பிறக்கவில்லை என்றாலும், தன் இதயத்தில் மாதக்கணக்கில் சுமந்து பெற்றெடுத்த தனது ஆன்மீகப் பிள்ளைகளுக்காக அவர் தன் உயிரையும் கொடுக்க ஆயத்தமாக இருந்தார். தனதுஜெபங்களில் அவர்களுக்காகப் போராடினார். அவர்களுடன்இணைந்து விளையாடினார், ஆராதித்தார், ஜெபித்தார். பின்னர் தன் வாழ்வின் இறுதிக் காலத்தில்  இருபதாண்டுகள் படுக்கையிலேயே இருந்தபோதும் கூட அவர்களுக்குத்தொடர்ந்து கடிதங்கள் எழுதினார். அவர்களை நேரம் கிடைக்கும் போதெல்லாம் சந்தித்து உற்சாகப்படுத்தினார்.

ஐக்கியத்தில் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகவே அவர்களுக்கான மருத்துவத் தேவைகளும் அதிகரித்தன. நாகர்கோவில் அருகிலுள்ள நெய்யூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவமனை வரைக்கும் பிள்ளைகளை அழைத்துச் சென்று வருவது பெரும் கடினமான நிலையாக இருக்கவே, டோனாவூரில் ஒரு மருத்துவமனை அமைக்கும் எண்ணம் உருவானது. எந்த ஒரு திட்டத்துக்கும் கர்த்தரை மட்டுமே நம்பியிருந்த ஏமி கார்மைக்கேல் அம்மையார், ஜெபத்தில் அந்தத் திட்டத்தை வைத்து, அடையாளமாக கர்த்தரிடம் கேட்டிருந்த பதில் வரும்வரை காத்திருந்தார். உடன் ஊழியர்களையும், சிறுவர், சிறுமிகளையும் தன்னுடன் ஜெபிக்க வலியுறுத்தினார். தன் ஊழியம் எப்போதுமே குழுவாக நடக்கின்ற ஊழியம் என்பதை அவர் மறக்கவில்லை, பிறருக்கு நினைவுறுத்தத் தவறவும் இல்லை.

ஊழியங்களில் நடக்கும் வெற்றிகரமான மன மாற்றங்கள் மட்டுமே மேலை நாடுகளிலிருந்து பணம் அனுப்பும் கொடையாளர்களுக்கு அறிக்கைகளாக அனுப்பப்பட்டு வந்தகாலத்தில், இந்தியாவில் ஊழியங்கள் எத்தனை கடினமானது என்று தனக்காக ஜெபிக்கும், ஊழியத்துக்காகப் பணம் அனுப்பித் தாங்கும் நண்பர்களுக்குக் கடிதங்களாக ஏமி எழுதி அனுப்பிய எழுத்துகள்தாம் பின்னர், “உள்ளது உள்ளபடியே” என்ற பெயரில் புத்தகமாக வந்து பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இந்தப் புத்தகத்தின் மூலம் இந்திய ஊழியத்துக்காக உண்மையாக ஜெபிக்கும் பலர் உருவானார்கள்.

ஜப்பானில் இருந்தபோது ஏமியும் உடன் ஊழியர் மிசாகி சான் இருவரும், நரியின் ஆவி பிடித்திருந்த ஒரு கொலை வெறியுள்ள  நபருக்காக ஜெபிக்கச் சென்றிருந்தனர். அந்த மனிதனை சரியாக்க உள்ளூர் பூசாரிகள் செய்திருந்த தண்டனைகள் மற்றும் முயற்சிகள் வெற்றி பெறவில்லை. இந்த இருவரும் ஜெபித்துவிட்டு தைரியமாக அந்த அறைக்குள் சென்றனர். இயேசு என்ற பெயரைச்                   சொன்னதும் அந்த மனிதன் பெரும் ஆக்ரோஷத்துடன் அவர்களைத் தாக்க முயன்றார், அவரைக் கட்டிப் போட்டிருந்ததால் இவர்கள் இருவரும் தாக்குதலுக்குத் தப்பினார்கள். அவர்கள் இருவரையும் அந்த அறையை விட்டு வெளியேறும்படி வலியுறுத்தினார்கள். அந்த ஆவி நீங்கும்வரை தாங்கள் ஜெபிக்கப் போவதாகவும், அவருக்கு சுகமானதும் தங்களை அழைக்கும்படியும் கேட்டுக் கொண்டு               அவர்கள் இருவரும் சென்றனர். ஒரு மணி நேரத்தில் அந்த நபரின் மனைவி செய்தி அனுப்பினார். அந்த மனிதன் அசுத்தஆவி நீங்கி, சுகமாக இருந்தார். அடுத்த நாள் அந்த நபரே இவர்களை அழைத்து அனுப்பினார். அடுத்த சில நாட்களுக்குள் கிறிஸ்துவைப் பற்றியும் அவரைப் பின்பற்றுவதைப் பற்றியும் விளக்கினார்கள். அவர் ஒரு கிறிஸ்தவ விசுவாசியாக மாறினார்.

ஏமி கார்மைக்கேலின் ஜெபத்தினால் பிசாசுகள் துரத்தப்பட்டிருக்கின்றன, நோய்கள் சுகமாகியிருக்கின்றன. அவரை ஒரு அற்புத ஊழியம் செய்யும் நபராக்க சிலர் முயற்சித்தபோது தனது ஊழியம் நற்செய்தியை அறிவிப்பது மட்டும்தான் என்பதில் உறுதியாக இருந்த ஏமி, தான்                                           துவக்கிய மருத்துவமனைக்கும் கூட ‘பரம சுகசாலை’ என்றே பெயரிட்டார். அங்கு வரும் நோயாளிகள் நற்செய்தியைக் கேட்க ‘சுப செய்திசாலை’ என்ற ஒரு சிற்றாலயத்தையும் கட்டினார். இன்றும் சிறப்பாக, பரபரப்பாக இயங்கி வரும் இந்த மருத்துவமனையில் தொழுநோய் சிகிச்சைக்கென்றும் ஒரு சிறப்புப் பிரிவு இருக்கின்றது.

இயற்கையை அதிகம் நேசித்த ஏமி கார்மைக்கேல் தன் ஐக்கியத்தில் உள்ளவர்களும், சிறுவயது துவங்கி இயற்கையை நேசிக்க, அதைப் படைத்த கர்த்தரை இன்னும் அதிகம் துதிக்க வழி செய்யும்படியாக நரைக்காடு என்ற ஒரு மலைப்பகுதியை இஸ்லாமியர் ஒருவரிடமிருந்து விலைக்கு வாங்கி அங்கே மூன்று கட்டிடங்களைக் கட்டி அனைவரும் விடுமுறை காலத்தில் நேரத்தைச் செலவிட வாய்ப்பை                 உருவாக்கினார். கன்னியாகுமரியில் கடற்கரை ஓரம் யோப்பா என்ற பெயரில் இன்னும் ஒரு இடம் இதைப் போலவே விடுமுறைக்காக வாங்கப்பட்டது. இயற்கையைப் பாதுகாப்பதிலும், மாசுக் கட்டுப்பாட்டிலும் டோனாவூர் ஐக்கியத்தின் சிறப்பை அரசாங்கமும்  அறிஞர்களும் இன்றும் பாராட்டிக் கொண்டிருக்கின்றனர்.

பாடல்கள் பலவற்றை எழுதி நண்பர்களால் இசை அமைக்கப்பட்டு அவற்றை ஐக்கியத்தில் பாட வைத்தார் ஏமி. சிறுவர்களுக்கான நகைச்சுவையான பாடல்கள் பல எழுதப்பட்டன. அத்துடன் இயற்கை என்ற ஒரு பாடம் ஐக்கியத்திற்குள் இருந்த பாடசாலையில் பிள்ளைகளுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது. எதிர்ப்புகளைப் பல திசைகளிலும் இருந்து சந்திக்க வேண்டியிருந்தாலும், வெறுப்புகளைக் கிறிஸ்தவ அமைப்புகளிலிருந்தே எதிர்கொள்ள வேண்டியதாக இருந்தாலும் ஏமி தன் பாதுகாப்புக்கு கர்த்தரையே நம்பியிருந்தார். பிள்ளைகளைக் காப்பாற்ற அவர் எதிர்கொண்ட வழக்குகள் பலவற்றில் கிறிஸ்தவ நீதிபதிகளே ஏமிக்கு எதிராக தீர்ப்புகள் சொல்லியிருக்கின்றனர். சில சூழல்களில் தனக்கு நீதி கிடைத்தது என்றாலும், பல நேரங்களில் கர்த்தரை மட்டுமே இன்னும் அதிகம் நெருங்குவதற்குத் தனக்கு ஏற்பட்ட ஏமாற்றங்களும், தோல்விகளும் காரணமாக இருந்தது என்று எழுதுகிறார் ஏமி கார்மைக்கேல்.

சிறுவர்கள் அண்ணாச்சிகளின் மேற்பார்வையிலும், சிறுமிகள் சிறு வீடுகளில் அக்காக்கள், சித்திகள் அரவணைப்பிலும் சிறுகுழுக்களாக வாழ்ந்து வந்தனர். அப்போது ஒருமுறை இரவில் அங்கு வந்த புலி ஒன்று வராந்தாவில் படுத்திருந்த குழந்தைகளையோ, பண்ணையில் கட்டப்பட்டிருந்த மாடுகளையோ எதுவும் செய்யாமல் போய்விட்டது. மறுநாள் புலியின் கால் தடத்தைக் கண்டு அனைவரும் கர்த்தரைப் புகழ்ந்தபோது, கர்த்தர்தான் தன் தூதனை அனுப்பி அந்தப் புலியைத் திரும்பிப் போகச் செய்திருக்கிறார் என்று சொன்னார்  ஏமி.  வேட்டைக்காரர்கள் அதே புலியைக் கொன்று விட்டதாகச் சொல்ல, கர்த்தரின் தூதனால் வழி நடத்தப்பட்டு, யாருக்கும் தீமை செய்யாமல்போன புலியைக் கொன்று விட்டீர்களே          என்று வருந்தியிருக்கிறார் அம்மா. பல வருடங்களுக்குப் பின்னர் இன்னொரு புலியின் தலையை ஒரு நண்பர் அம்மாவுக்கு பரிசாகக் கொடுக்க, அது பாடம் பண்ணப்பட்டு அம்மாவின் அறையில் சுவரில் மாட்டப்பட்டு இருக்கின்றது. தன்னையே சார்ந்திருப்பவர்களுக்கு கர்த்தர் பாதுகாப்பு அளிப்பார் என்ற செய்தியை அந்தப் புலித்தலை இன்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டின் அரசி ஏமி கார்மைக்கேலுக்கு விருது ஒன்றை வழங்கியதுடன், டோனாவூர் ஐக்கிய மருத்துவமனைக்கும் ஒரு நன்கொடை வழங்கினார்.

பணக்காரர்களின் கொடுமை, காவலர்களின் பொய்க் குற்றச்சாட்டு போன்றவற்றால் அநியாயமாக சிறையில் அடைக்கப்பட்டு, அங்கு நடந்த கொடுமையைத் தாங்க முடியாமல் தப்பி வெளியே வந்த செம்புலிங்கம் என்ற ஒரு நபர் மீது அம்மாவுக்கு பெரும் பாரம் ஏற்பட்டது. அந்த நபரைச் சந்திக்க வேண்டும், அவருக்கு இயேசுவின் நற்செய்தியைச் சொல்ல வேண்டும், அவரை மனம் திரும்பி சரணடையச் சொல்ல வேண்டும் என்ற ஆவல் அவருக்கு இருந்தது. தமிழகத்தின் ராபின்ஹூட் என்று இந்திய, இங்கிலாந்து பத்திரிக்கைகளில் பெயர்பெற்ற செம்புலிங்கத்தின் மனைவி இறந்துபோகவே தனது பிள்ளைகளை அம்மாவின் ஐக்கியத்தில் சேர்த்துவிட வேண்டும் என்ற கோரிக்கையை செம்புலிங்கம் வைக்க, இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அம்மா சொல்ல, இருவரும் ஆன்மீகத் தாயும் பிள்ளையும்போல் ஆகிவிட்டனர். பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செம்புலிங்கம் தன்னிடம்  வந்து தான் ஞானஸ்நானம் வாங்க வேண்டும் என்று கேட்டதாகவும், கல்கத்தாவிலுள்ள போதகர் ஒருவர் செம்புலிங்கத்துக்கு ஞானஸ்நானம் கொடுப்பதாகவும் ஒரு கனவு கண்டார் அம்மா ஏமி. அதே கனவு அப்படியே நிறைவேறியது. கல்கத்தாவிலிருந்து திருவாங்கூர் செல்லும் வழியில் திருநெல்வேலியில் ஒரு நாள் இருந்த அந்தப் போதகர் செம்புலிங்கத்துக்கு ஞானஸ்நானம் கொடுத்தார். செம்புலிங்கம் வேதாகமத்தை ஒழுங்காக வாசித்ததுடன் அதன்படி நடக்க அதிகம் பிரயாசப்பட்டார். அதில் வெற்றியும் பெற்றார். காவலர்களின் கொடுமை தாங்க இயலாமல் மீண்டும் சிறையிலிருந்து தப்பினாலும் இனி துப்பாக்கியால் யாரையும் சுட மாட்டேன் என்றும் அம்மாவுக்கு வாக்குக் கொடுத்திருந்தார் செம்புலிங்கம், அதை தன் மரணத்தின்போது கூட காப்பாற்றினார்.

செம்புலிங்கத்தை அரசாங்கத்திடம் சரணடையும்படியும், தான் நீதிபதிகளிடம் அனுமதி பெற்று பெரும் கொடுமைகள் இல்லாத சிறைத் தண்டனையை செம்புலிங்கம் அனுபவிக்க வழி செய்வதாகவும் அம்மா சொன்னாலும், இனி தன்னால் சரணடைவது இயலாது என்று நினைத்தார் செம்புலிங்கம்.                          செம்புலிங்கத்தின் பெயரால் பலர் திருட்டுகள் செய்து அவரது பெயரை இன்னும் மோசமாக்கினார்கள். அரசாங்கத்தின் கோபமும் செம்புலிங்கத்தின் மீது அதிகரித்துக் கொண்டே இருந்தது. இறுதியில் செம்புலிங்கத்தைத் தந்திரமாகப் பிடிக்கத் திட்டமிட்ட காவலர்கள் தோற்றாலும்,                                          செம்புலிங்கம் அவர்களைத் துப்பாக்கியால் சுடாமல், முடிந்தவரை தப்பிக்க முயற்சித்தார். அவரது தோழன் காசி காவலரால் சுடப்பட்டவே, அவர்களிடம் சரணடைந்தார் செம்புலிங்கம். காவலர்கள் செம்புலிங்கத்தை ஆசை தீர சித்திரவதை செய்து கொன்றனர். செம்புலிங்கம் சரணடையாமல் போனதும், அவரது மரணமும் அம்மாவுக்கு அதிக துக்கத்தைக் கொடுத்தது. அவரைப் பலர் ஏளனம்           செய்யவும் காரணமாக இருந்தது.

ஊழியம் செய்யச் செல்லும் சகோதரிகள் தங்கியிருப்பதற்கான ஒரு வீட்டின் கட்டுமானப்பணி டோனாவூர் அருகிலுள்ள களக்காடு என்ற ஊரில் நடந்து கொண்டிருந்தது. அதைப் பார்வையிடச் சென்ற அம்மா, அங்கே மாலை மயங்கும் வேளையில் வெட்டப்பட்டிருந்த குழியில் தவறி விழுந்தார்கள். கணுக்காலும் முதுகும் பாதிப்படைந்தன. அப்போதும் கூட, மற்றவர்கள் விழாமல் தான் விழுந்ததற்காக கர்த்தரைத் துதிக்கச் சொன்னாராம் அம்மா. சிகிச்சையின் காரணமாக சிறிது முன்னேற்றம்                ஏற்பட்டாலும் அடுத்த இருபது ஆண்டுகள் அவர் படுக்கையிலேயேதான் இருக்கும் நிலை ஏற்பட்டது. தன் அறைக்குள் நடமாடிக் கொண்டிருந்த அம்மா ஏமி, குளியலறையில் விழுந்த பின்னர் மொத்தத்தில் படுக்கையிலேயே இருக்க வேண்டியதாயிற்று. ஆனாலும் தன்னால் முடிந்தவரை புத்தகங்களை எழுதிக் கொண்டே இருந்தார். அவர் அறையில் ஜெபங்களும், திட்டமிடுதல்களும் நடந்து கொண்டே இருந்தன.

1948 இல் சிறுமிகள் தவறாக பயன்படுத்தப்பட்ட தேவதாசிகள்முறை சட்டப்படி தடை செய்யப்பட்டாலும், ஏற்கெனவே ஐக்கியத்தில் இருந்த பிள்ளைகள் மற்றும் வேண்டாம் என்று கைவிடப்பட்ட பல குழந்தைகளை டோனாவூர் ஐக்கியம் இன்றும் அரவணைத்துக் கொண்டிருக்கின்றது. ஊழியர் பற்றாக்குறையால் ஆண் பிள்ளைகளின் பகுதி நிறுத்தப்பட்டு, அந்த இடத்தில் சந்தோஷ வித்யாலயா என்னும் உறைவிடப் பள்ளி இயங்கி வருகின்றது. இந்தியாவின் வட பகுதியில் ஊழியம் செய்பவர்களின் பிள்ளைகள் படித்துவரும் இந்தப் பள்ளி இன்னும் சிறப்பான பெயருடன் நல் நோக்கோடு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

1887 இல் கெஸ்விக் கன்வென்ஷன் நடந்தபோது அதில் சீன உள்நாட்டு ஊழியங்களை நிறுவிய ஹட்சன் டெய்லர் அவர்களது மிஷனரி வாழ்க்கையைப் பற்றிய உரையைக் கேட்ட ஏமி, தன் வாழ்வில் மிஷனரி வாழ்வுக்கான அழைப்பு இருப்பதை உறுதிப்படுத்திக் கொண்டார். அதே ஊழியத்தில் சீனாவுக்குச் செல்ல அனுமதி கேட்டு எழுதிவிட்டு, லண்டனில் உள்ள பெண் ஊழியர்கள் பயிற்சியகத்தில்                      தங்கியிருந்தார். ஆசியாவுக்கு ஊழியத்துக்குச் செல்ல ஆயத்தமாக இருந்த ஏமியின் உடல் பலகீனத்தால் அவரது பயணம் தள்ளிப் போடப்பட்டது.  இறுதியில் சி எம் எஸ் என்ற மிஷனரி அமைப்பில் இணைந்தார்.

1912 இல் இங்கிலாந்தின் அரசி மேரி, அவரது பணிகளைப் பாராட்டி டோனாவூர் மருத்துவமனைக்கு ஒரு நன்கொடை அளித்தார். 1918 ஆம் ஆண்டு சிறுவர்களுக்கான வீடும் துவக்கப்பட்டது.  1916 இல் பொதுவான வாழ்க்கையின் சகோதரிகள் என்ற அமைப்பைத் துவக்கினார்.

நல்ல வாசிப்புப் பழக்கமும், மொழியறிவும், எழுத்து நடையும் ஏமி கார்மைக்கேல் அம்மாவின் வாழ்வில் நிறைவாக இருந்தது. அது பல புத்தகங்கள், கட்டுரைகள், கடிதங்கள், கவிதைகள், கூர்மையான வார்த்தைகளுக்குக் காரணமாயிற்று.

ஒருமுறை இப்படி எழுதினார்கள்,  “அன்பு இல்லாமல் நீங்கள் கொடுக்கலாம். ஆனால் கொடுக்காமல் உங்களால் அன்பு செய்ய முடியாது.” எத்தனை உண்மை?

அலைகடலில் தத்தளித்த ஒரு படகுபோல ஏமி கார்மைக்கேல் அம்மாவின் வாழ்வு பல அதிர்வுகளோடு போய்க்கொண்டிருந்தாலும் ஒருநாளும் அது வழி தவறவோ மூழ்கவோ இல்லை.

உதாரணமாக அவர் வாழ்வில் நடைபெற்ற சில சம்பவங்களை நாம் நினைவுகூரலாம்.

ஒருமுறை கோகிலா என்னும் சிறுமியை ஏமி காப்பாற்றினார். கோகிலாவின் பெற்றோரோ அந்தப் பெண் தங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று கேட்டனர். அதில் நல்ல நோக்கம் இல்லை என்று தெரிந்து கொண்டதால், நல்ல உள்ளம் கொண்ட மக்கள் மூலம் அந்தப்பெண் வயதுக்கு வரும்வரை வேறு இடத்தில் மறைத்து வைத்திருந்தார் கார்மைக்கேல் அம்மா. இதனால் வழக்கு தொடுக்கப்பட்டது. அம்மா ஏமி கார்மைக்கேலுக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை தீர்ப்பாகக் கொடுக்கப்பட்டது. ஆனால் அற்புதவிதமாக 1914 பெப்ரவரி 7 ஆம் தேதி அவர்மீதான வழக்கு திரும்பப் பெறப்பட்டதாக ஒரு தந்தி அவருக்கு வந்தது. என்ன ஆச்சரியம்!

அதேபோல், ஏமிகார்மைக்கேல் அம்மாவிற்கு neuralgia என்ற நரம்பு சார்ந்த ஒரு பலகீனம் இளம்வயதிலேயே இருந்தது. இது அவ்வப்போது அவர் உடலை மிகவும் பலகீனமாக்கி, உடலெல்லாம் வலியுடன் வாரக்கணக்கில் படுக்கையில் இருக்க வைத்துவிடும். இதனால்தான் அவர் மிஷனரியாகச் செல்கிறேன் என்று சொன்னபோது அவரது நண்பர்கள் அவரை முட்டாள் என்று நினைத்தனர். சீக்கிரத்தில் இங்கிலாந்துக்குத் திரும்பி வந்துவிடுவார் என்று முன்னறிவித்தனர். ஆனால் தனது மரணம் வரைக்கும் அவர் தன் சொந்த மண்ணுக்குத் திரும்பவே இல்லை.

மொத்தத்தில் 35க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதிய ஏமி கார்மைக்கேல், தனது விபத்துக்குப் பின் படுக்கையில் இருந்து கொண்டே இருபது வருடங்களில் 20 புத்தகங்களை எழுதினார். தன்னால் எழுத இயலாமல் போனபோது அவர் சொல்லச் சொல்ல அவரோடு இருந்த சகோதரிகள் எழுதினார்கள்.

திருநெல்வேலியை மட்டுமே மையமாக வைத்து தனது ஊழியங்களைச் செய்த அம்மா, தனது புத்தகங்கள் பலவற்றில் திருநெல்வேலி மாவட்டம் பற்றி மிக நுணுக்கமான குறிப்புகளையும், அந்த மாவட்டத்து மக்கள் மீது அவர் வைத்திருந்த வாஞ்சையையும் மிகவும் தெளிவாகவும் விபரமாகவும் எழுதியிருக்கின்றார்.

இன்றும் கர்த்தரின் உண்மைத் தன்மைக்கும், ஏமி கார்மைக்கேல் அம்மையாரின் அர்ப்பணிப்புக்கும்          சாட்சியாக டோனாவூரில், நட்சத்திரக்கூட்டம் என்று அழைக்கப்படும் டோனாவூர் ஐக்கியம் தன் ஊழியங்களைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது. சிறுமிகளாக உள்ளே வந்து, ஆயிரக்கணக்கான சிறுவர்களை வளர்த்து ஆளாக்கிய ஐக்கியத்தைச் சார்ந்த அறுபது வயதுக்கும் மேற்பட்ட பெண்மணிகள் நூறு பேருக்கும் மேல் இப்போது அன்புடன் பராமரிக்கப்படுகின்றனர். இன்னும் ஐக்கியத்திலிருந்து படித்து, பணிகளுக்குச் சென்று, திருமணம் முடிந்து  சிறப்பாக வாழ்ந்து கொண்டிருக்கும் பல பெண்கள் கர்த்தருக்கென்று பலத்த சாட்சிகளாக  நட்சத்திரங்களைப்போல பிரகாசிக்கின்றனர்.

ஆண்டவருடைய ராஜ்ஜியம் சேர்த்துவிட்டார் கார்மைக்கேல் அம்மா.

மிஷனரிகளின் ரத்தத்தின்மேல் எழும்பி நிற்கும் நம் திருச்சபை, கறை திறை இல்லாத மணவாட்டியாய் அவர் வருகைக்கு ஆயத்தப்பட வேண்டுமானால் சொந்த வாழ்வில் கடவுளுக்கும் நமக்குமான உறவை வலுப்படுத்தி வேதம் காட்டும் வழியில் நடப்போம். அம்மா காட்டிய வழியில் வேதத்தை வழிகாட்டியாகவும், தியாகத்தையும், உழைப்பையும் நோக்கமாகவும் கொண்டு நம் வாழ்நாட்களில் நாம் காணும் தீமைகளை அகற்றுவதில் நற்செய்தி ஊழியம் எப்படி உதவ முடியும் என்று சிந்திப்போம். கர்த்தரின் சித்தப்படி அதைச் செய்ய முயற்சிப்போம். கர்த்தர் நமக்கு உதவி செய்வார். 

site1ogin@yawa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top