
மிக மோசமானவர்களின் தொழில் என்றும், மதிப்பில்லாத, சம்பளம் அதிகம் இல்லாத பிழைப்பு என்றும் அழைக்கப்பட்ட தாதியர் பணியை, தெய்வீகப் பணி என்றும் மதிப்பு மிக்கது என்றும் மாற்றியவர் ஃப்ளாரன்ஸ் நைட்டிங்கேல் ஆவார்.
1820 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் செலவச் செழிப்பும் புகழும் வாய்ந்த ஒரு குடும்பத்தில் பிறந்தார் ஃப்ளாரன்ஸ். கோடைக்காலத்துக்கு என்றும் மற்ற காலத்துக்கு என்றும் இரு பெரும் வீடுகள் இவர்களுக்கு இருந்தன. மிகச் சிறந்த கல்வி அவருக்குக் கொடுக்கப்பட்டது. ஆனாலும் ஃப்ளாரன்ஸ்ஸுக்கு நர்சிங் எனப்படும் தாதியர் பணியின் மீது தான் அவருக்குப் பெரும் ஆர்வம் இருந்தது. தனது எஸ்டேட்டில் வேலை செய்தவர்களின் வீடுகளில் வியாதிகள், பிள்ளைப் பேறு, மரணம் போன்ற நிகழ்ச்சிகளில் நிச்சயமாக ஃப்ளாரன்ஸ் இருப்பார்.
பதினோராம் வயதில் ஜேக்கப் ஆபோட் என்பவர் எழுதிய கார்னர் ஸ்டோன் என்ற புத்தகத்தின் மூலம் தனிப்பட்ட ஆன்மீக அனுபவத்துக்குள் வந்தார். தோட்டத்தில் உலவிக் கொண்டே ஜெபித்துக் கொண்டிருந்த போது “எனக்கு சேவை செய்ய உன்னைத் தெரிந்து கொண்டேன்” என்ற கர்த்தரின் சத்தத்தைக் கேட்டார். தனது வீட்டின் அருகே உள்ள சிறுமிகள் மற்றும் பெண்களை அழைத்து வேதபாட வகுப்புகள் நடத்தினார். வியாதியாய் இருப்பவர்களுக்கு மருந்துகள் வாங்கிக் கொடுத்தார். நர்சிங் பற்றிய ஒழுங்கான படிப்பு இல்லாததால் தானாகவே அதைப் பற்றி கற்றுக் கொண்டார் ஃப்ளாரன்ஸ். ஜெர்மனியில் மட்டுமே ஓர் கிறிஸ்தவ அமைப்பு பெண்களுக்கு டீக்கன்கள் என்னும் பதவிக்கான ஊழியர் பயிற்சி கொடுத்து நர்சுகளாக அனுப்பி வைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டார்.
1842 ஆம் ஆண்டு காலத்தில் ஏற்பட்ட மாபெரும் பஞ்சத்தால் ஐரோப்பில் இலட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். தன்னைச் சுற்றி இத்தனை பேர் பாடு பட்டுக் கொண்டிருக்கும் போது தான் மட்டும் வசதியாக வாழ்வது எப்படி என்ற கேள்வி அவரைத் துளைத்து எடுத்தது. தான் ஒரு நர்ஸாக மாற வேண்டும் என்று அவர் ஏங்கிக் கொண்டிருந்தார். ஆனால் அந்தக் காலத்தில் நர்சுகள் ஒழுக்கம் இல்லாதவர்கள் என்றும் குடிகாரிகள் என்றும், துணி துவைப்பதை விட குறைந்த சம்பளம் வாங்குபவர்கள் என்றும் தான் நிலைமை இருந்தது. மருத்துவமனைகளிலும் அவர்கள் சுத்தம் செய்யும் வேலையை மட்டுமே செய்து வந்தனர். ஆனால் மக்களுக்கு நன்மை செய்வதில் தாதியர் பணியில் பிற்காலத்தின் பெரும் வாய்ப்புக்கள் இருப்பது மட்டுமல்ல, சிறந்த அங்கீகாரமும், மதிப்பும் கிடைக்கும் என்பதையும் ஃப்ளாரன்ஸ் அறிந்திருந்தார்.
அந்தக் காலத்தில் இங்கிலாந்தில் பணக்காரர்களுக்கு தனியார் மருத்துவமனைகளும், ஏழைகளுக்கு இலவச மருத்துவமனைகளும் இருந்தன. பரம ஏழைகள் கூட செல்ல விரும்பாதவைகளாகவே இலவச மருத்துவமனைகள் இருந்தன. மிகவும் மோசமான சூழ்நிலை, சுத்தம் என்பதே இல்லாத நிலை, கண்டு கொள்ள யாரும் இல்லாத நிலையில் தான் இவைகள் இருந்தன. இறந்து போவதற்காகவே இங்கு மக்கள் வந்து சேர்ந்து கொள்வார்கள். இங்கு பல மனநோயாளிகள் வந்திருப்பார்கள். மொத்தத்தில் இலவச மருத்துவமனைகள் என்பவைகள் நரகங்களாகவே இருந்தன.
ஜெர்மனியில் தான் தாதியாக மாறுவதற்காகப் படிக்கப் போவதாகச் சொன்னார் ஃப்ளாரன்ஸ். பெற்றோரும் அக்காவும் எதிர்த்தாலும் இவர் தன் முடிவில் உறுதியாக நின்றார். ஜெர்மனியில் மிகச் சிறந்த பயிற்சியைப் பெற்றுத் திரும்பிய ஃப்ளாரன்ஸிடம் அவரது அம்மாவும் அக்காவும் பேசக்கூட மறுத்துவிட்டனர். பாரிஸ் நகரத்தில் மிகச் சிறந்த மருத்துவமனைகளும் மருத்துவர்களும் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு அங்கு பல இடங்களைப் பார்வையிட்டு நன்றாகக் கற்றுக் கொண்டார்.
ஏழைகளுக்கான பள்ளி ஒன்றில் சிறிது காலம் ஆசிரியையாகப் பணியாற்றினார். தாதிப்பணியும் ஆசிரியப்பணியும் தனக்கு மிகவும் விருப்பமானவைகள் என்று அவர் குறிப்பிட்டார். பின்னர் லண்டனில் உள்ள ஒரு வயதான பெண்மணிகளுக்கான மருத்துவமனையில் அவருக்கு மருத்துவமனைக் கண்காணிப்பாளர் வேலை கிடைத்தது. அதில் மருத்துவமனையில் இருக்க வேண்டிய வசதிகள் பற்றி ஒரு புரட்சியையே உருவாக்கினார் ஃப்ளாரன்ஸ். ஒவ்வொரு மாடியிலும் வென்னீர் குழாய்கள் இருக்க வேண்டும். உணவுகளை லிஃப்ட் மூலம் மாடிகளுக்கு அனுப்பி வைக்க வேண்டும். நர்ஸ்கள் உணவுக்காக மட்டுமே தங்கள் வார்டுகளை விட்டு வெளியே செல்ல வேண்டும் போன்ற விதிகளை உருவாக்கினார்.
லண்டன் பட்டணத்தில் ஏற்பட்ட காலராவின் காரணமாக தாதிகளில் பலர் கூட இறந்து போனார்கள். பலர் பயந்து போய் ஓடிவிட்டனர். ஃப்ளாரன்ஸ் வியாதி அதிகமாக இருக்கும் பகுதிக்குச் சென்று பணியாற்றினார். வெள்ளிக்கிழமை முதல் ஞாயிற்றுக் கிழமை வரை உட்காரக் கூட நேரம் இல்லாமல் தன் சேவையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்.
அப்போது நடந்த போரில் துருக்கியிலுள்ள இங்கிலாந்தின் இராணுவத்தளத்தில் பல வீரர்கள் காயப்பட்டுக் கிடக்கின்றனர் என்றும் அவர்களுக்குப் பணியாற்ற ஃப்ளாரன்ஸ் செல்ல முடியுமா என்றும் கேட்டு போர் பற்றிய அரசு செயலாளர் ஒருவர் கடிதம் அனுப்பியிருந்தார். அந்தக் கடிதத்தைப் பார்க்கும் முன்பதாகவே, அந்தப் போர்வீரர்களுக்குப் பணி செய்யத் தான் போக ஆயத்தமாக இருப்பதாகவும், அனுமதி வேண்டும் என்று அவருக்கு எழுதியிருந்தார் ஃப்ளாரன்ஸ். 24 கன்னியாஸ்திரிகள் உட்பட 38 பேர் இந்தப் பணிக்காக ஃப்ளாரன்ஸ் தலைமையில் துருக்கிக்குப் பயணம் செய்தனர். இதற்கான ஆணை பாராளுமன்றத்தில் ஒப்புதல் பெற்றது.
துருக்கியிலுள்ள ஸ்குட்டாரி என்ற இடத்தில் இங்கிலாந்தின் இராணுவ மருத்துவமனை இருந்தது. போரில் காயப்பட்ட வீரர்கள் இங்கே கவனிப்பாரற்றுக் கிடந்தனர். இராணுவ மருத்துவர்கள் ஃப்ளாரன்ஸையும் அவர் குழுவினரையும் கண்டு கொள்ளவே இல்லை. ஆனாலும் அந்தக் குழு, நோயாளிகளுக்கு சூப் கொடுத்தல், அவர்களது துணிகளைத் துவைத்தல், தரையை சுத்தம் பண்ணுதல் போன்ற பணிகளைச் செய்தார்கள். ஃப்ளாரன்ஸ் தன் சொந்த செலவில் ஒரு சமையல் அறையையும் உணவுப் பொருட்களையும் வாங்கி மிகச் சிறப்பாகப் பணியாற்றினார். மருத்துவர்களும் சிறிது சிறிதாக அவர்களை மதிக்கத் துவங்கினார்கள்.
ஒவ்வொரு நோயாளியும் ஏழை என்றோ, இயலாதவர் என்றோ நினைக்கக் கூடாது. அவர்கள் உங்களில் இருப்பவர்களிலேயே மேலானவர்களுக்கு இணையானவர்கள் என்ற கொள்கை தான் ஃப்ளாரன்ஸ் தன்னுடன் இருப்பவர்களுக்குச் சொல்வது. எந்தப் போர் வீரன் இறந்து போவதாக இருந்தாலும் அவன் அருகே கடைசிவரை இருப்பார் ஃப்ளாரன்ஸ். அவர்களது கடைசி ஆசை பற்றி எழுதி அவர்களது குடும்பத்தாருக்கு கடிதம் எழுதுவார் ஃப்ளாரன்ஸ்.
பல நாட்கள் இரவு நீண்ட நேர அவரது எழுத்து வேலைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கும். ஏற்கனவே இருந்த மருத்துவமனைக்கு அருகே இன்னொரு மருத்துவமனை அமைய ஃப்ளாரன்ஸ் பெரும் முயற்சி எடுத்தார். தனது சொந்தப் பணம், பிறரிடமிருந்து வசூலித்த பணம் போன்றவற்றால் காயமுற்று, நோயுற்று இருக்கும் ராணுவ வீரர்களுக்கு வேண்டிய அனைத்தையும் வழங்கினார் ஃப்ளாரன்ஸ். இவரது பணி பற்றி இங்கிலாந்தின் பத்திரிக்கைகள் எழுதவே பலர் உதவியாக துருக்கிக்கு செல்ல முன் வந்தனர். அவர்களில் சிலரை சமையலறைக்கும், அங்கே வந்திருந்து பாடுகள் பட்டுக்கொண்டிருக்கும் ராணுவ வீரர்களின் மனைவிகளைக் கவனிப்பதற்கும் ஏற்படுத்தினார் ஃப்ளாரன்ஸ்.
ஒரு ராணுவ மருத்துவமனை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பல திட்டங்களை ஃப்ளாரன்ஸ் தனது அனுபவத்தின் மூலமாக எழுதி வைத்தார். அது பின்னர் அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பிற்காலத்தில் உலக அளவில் தாதியர் பணிக்கான ஒரு அடிப்படை கோட்பாடாக மாறியது.
இரவு முழுவதும் கையில் ஒரு விளக்குடன் ஃப்ளாரன்ஸ் மருத்துவமனைப் படுக்கைகளைப் பார்வையிடுவார். இவர் ஒரு தேவதூதன் போன்றவர் என்றே அங்கிருந்த பலரும் பராட்டினர். பத்திரிக்கைகள் பாராட்டின. போர் முடிந்து நாடு திரும்பும் போது அவருக்குப் பெரும் வரவேற்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அவை எவற்றையும் தனக்கு வேண்டாம் என்று அலட்சியம் செய்தார் ஃப்ளாரன்ஸ். இப்போது அவரது தாயார் கூட அவரைப் பாராட்டத் துவங்கினார்.
இராணுவ வீரர்கள் படிப்பறிவில்லாதவர்களாக இருந்தனர். குடியிலேயே தங்கள் சம்பளத்தை அழித்துக் கொண்டிருந்தனர். ஃப்ளாரன்ஸ் மேல் அதிகாரிகளின் எச்சரிப்புகளையும் எதிர்ப்புகளையும் மீறி, அந்த ராணுவ வீரர்களுக்காக நூலகங்களையும், எழுத, படிக்கக் கற்றுக் கொள்ளும் கல்வி அறைகளையும் உருவாக்கினார். விளையாட்டுகள் மூலம் அவர்களது மனதை சுத்தமாக வைக்க முயற்சித்து, குடிக்கும் பணத்தைத் தங்கள் குடும்பங்களுக்கு அனுப்புவதற்காக மணி ஆர்டர் நிலையங்களை ராணுவத் தளங்களில் உருவாக்கச் செய்தார்.
அரசு அவரை அதிகம் பாராட்டி, அவரது முக்கியத்துவத்தை உணர்ந்த பின்னர், ராணுவ மருத்துவப் பள்ளி துவங்கும் திட்டத்தை ஃப்ளாரன்ஸ் உருவாக்கினார். ஒரு தாதியர் பயிற்சிப் பள்ளியைத் தானே உருவாக்கினார். இலவச மருத்துவமனைகள் சிறப்பாக பணியாற்றும் வகையில் தனது மாணவிகளில் ஒருவரையே மருத்துவக் கண்காணிப்பாளராக்கினார். இவரது தாதியர் பள்ளியில் படித்த பலர் உலகம் எங்கும் போய் தாதியர் பள்ளிகளை உருவாக்கி பலரை தாதியர்களாக்கினர். பல மருத்துவமனைகள் ஃப்ளாரன்ஸ் பள்ளியில் படித்த தாதியர்களையே தங்கள் மருத்துவமனைகளில் வேலைக்கு அமர்த்தினார்கள். இந்த தாதியர் “ஃப்ளாரன்ஸ் நர்சுகள்” என்று அழைக்கப்பட்டனர். சுத்தம், சிறப்பான பணி, ஒழுக்கம், காலம் தவறாமை, நோயாளிகள் மீது அக்கறை போன்ற தலைப்புகளில் ஒவ்வொரு தாதியும் மதிப்பிடப்பட்டனர்.
இந்தியாவுக்கு செல்லவிருந்த ஒரு ஆங்கிலேயப் பிரபுவிடம் இந்தியாவைப் பற்றிய தனது அக்கறையைப் பகிர்ந்து கொண்டார். இந்தியாவில் நீர்ப்பாசனம் சிறப்பாக இருந்தால் தான் அனைத்து நலத்திட்டங்களும் பயன் தரும் என்று உறுதியாகச் சொன்னார் ஃப்ளாரன்ஸ். பொறியாளர் ஆர்தர் காட்டன் என்னும் நீர்ப்பாசன அதிகாரியுடன் தொடர்ந்து உரையாடிக் கொண்டிருந்தார் ஃப்ளாரன்ஸ். ஒவ்வொரு ஊரும் நீர்ப்பாசனம் பெறுவதே உங்கள் திட்டமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார் ஃப்ளாரன்ஸ். காட்டன் அவர்களது மேற்பார்வையில் கொள்ளிடம் அணை, தென்னாற்காடு மாவட்டத்தின் அணைகள் கட்டப்பட்டன. இந்தப் பகுதிகள் பின்னர் ஏற்பட்ட பட்டினிச் சாவினால் பாதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
200க்கும் அதிகமான புத்தகங்களை எழுதினார் ஃப்ளாரன்ஸ். அவரது அறிக்கைகளே பிற்காலத்து மருத்துவமனைகளுக்கான வடிவமைப்புகளுக்கான அடிப்படையாக இருந்தது. சென்னை பொது மருத்துவமனை கட்டப்படுவதற்கான வடிவமைப்புக்கு ஃப்ளாரன்ஸ் அவர்களிடம் அறிவுரை கேட்கப்பட்டது, பல நாடுகளுக்கு இவரது ஆலோசனைகள் உதவியாக இருந்தன. பல பிரபல மருத்துவமனைகளுக்கான வடிவமைப்பு இவர் வழங்கியவைகளே. தொண்ணூறு ஆண்டுகள் வாழ்ந்த ஃப்ளாரன்ஸ் பல நூற்றாண்டுகளுக்கான பாதிப்பை தனது வாழ்நாளிலேயே உருவாக்கிச் சென்றார். அவரது வாழ்வின் குறிக்கோளாக அவர் சொன்னது இது தான், “ஆண்டவரே இதோ நான் இருக்கிறேன். என்னை அனுப்பும் என்பதே எப்போதும் என் பக்தி மார்க்கமாய் இருந்து வந்துள்ளது.”